மகிந்தவுக்கு எதிரான 2-வது நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் மைத்திரி ஏற்க மறுப்பு

இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரணில் விக்ரம சிங்கேவுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டது. இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டார். புதிய பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டார்.

ஆனால் அவரால் பாராளுமன்றத்தில் பெரும் பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதையடுத்து பாராளுமன்றம் கலைக்கப் படுவதாகவும், ஜனவரி மாதம் தேர்தல் நடத்தப்படும் என்றும் அதிபர் சிறிசேனா அறிவித்தார். ஆனால் அதற்கு இலங்கை சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.

இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் கரு.ஜெயசூரியா அறிவித்து நிறைவேற்றினார். அதை ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் ஏற்காமல் ரகளையில் ஈடுபட்டனர். சபாநாயகரை முற்றுகையிட்டு கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை அதிபர் சிறிசேனாவும் ஏற்கவில்லை. இதனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவா? அல்லது ராஜபக்சேவா? என்ற குழப்பம் நீடித்தது.

இதற்கிடையே பாராளுமன்றத்தில் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அதிபர் சிறிசேனா சம்மதித்தார். இதையடுத்து நேற்று பாராளுமன்றம் கூடியது. அப்போதும் ராஜபக்சேவின் ஆதரவு எம்.பி.க்கள் கோ‌ஷங்களை எழுப்பி ரகளையில் ஈடுபட்டனர். மிளகாய் பொடி தூவியும், நாற்காலிகளை வீசியும் ரகளையில் ஈடுபட்டனர்.

ஆனாலும் கடும் அமளிக்கு இடையே சபையை நடத்திய சபாநாயகர் கரு.ஜெயசூரியா, ராஜபக்சே அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை குரல் வாக்கெடுப்பாக நடத்தினார். இதில் 2-வது நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதற்கிடையே 2-வது நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியையும் அதிபர் சிறிசேனா ஏற்கவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுதொடர்பாக சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியை சேர்ந்த லட்சுமண்யபா அபய் வர்தனே கூறும்போது, “அதிபர் சிறிசேனா 2-வது நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்கவில்லை. அதை அவர் நிராகரித்து உள்ளார்” என்றார். ஆனால் இது தொடர்பாக சிறிசேனா அலுவலகத்தில் இருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

ரணில் விக்ரமசிங்கே கூறும்போது, “எங்களிடம் மெஜாரிட்டி உள்ளது. எங்களது அரசை நாங்கள் அமைப்போம். சட்டப்படி நாங்கள் செயல்படுவோம்” என்றார்.

இதனால் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது