கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின் நோக்கம் மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதே”

மஹிந்த ராஜபக்ஷ மீளவும் பதவிக்கு வர வேண்டும் என்பதே கூட்டமைப்பை விமர்சிப்பவர்களின்  நோக்கமாகவுள்ளது  என  வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்   கேசவன்  சயந்தன்  தெரிவித்தார்.

சமகாலத்தில்  ஏற்பட்டிருக்கும்  அரசியல் நெருக்கடியில்  கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே  அவர்  மேற்கண்டவாறு   தெரிவித்தார் .

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உண்மையில் மஹிந்த  ராஜபக்ஷ பதவியில் அமர வேண்டுமென்று நினைக்கின்ற தரப்பினர்கள் இந்த விடயத்தில் கூட்டமைப்பினராகிய நாங்கள் நடு நிலைமை வகிக்க வேண்டுமென்று கூறுகின்றார்கள்.

அவ்வாறு நடுநிலைமை வகிப்பதும் ஒன்று தான். ஏதாவது ஒரு தரப்பு அல்லது பலவீனமான ஒரு தரப்புக்கு ஆதரவளிப்பதும் ஒன்று தான்.

மஹிந்த ராஜபக்ஷ,பதவி,

இந்த அரசியல் பெரும்பான்மை சர்ச்சையில் மஹிந்த ராஜபக்ஷ மிகவும் பலவீனமாக இருக்கின்றார் என்பதை அறிந்த நீதியரசர் விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கூட்டமைப்பு நடுநிலை வகிக்க வேண்டும் என்பதாக கோரிக்கை விடுகின்றார்கள்.

மஹிந்த ராஜபக்ஷ எண்ணிக்கையில்  உறுப்பினர்களைப்பெற முடியாதவராக பெரும்பான்மையைப் பெற முடியாதவராக இருக்கின்ற நிலையில் தான் அந்தக் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. மாறாக ரணில் விக்கிரமசிங்க எண்ணிக்கையை அடைவதில் அவருக்கு சிக்கல் இருக்குமென்றால் இவர்களுடைய கருத்துக்கள் வேறு விதமாக அமைந்திருக்கும்.

ஆக மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சியில் அமர வேண்டுமென்பதற்காகத் தான் அவர்களது உட்கிடக்கையான  கருத்துக்களாக  இவை இருக்கின்றது. அது நிச்சயமாக எங்களுடைய மக்கள் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய ஆணைக்கு எதிரானது. மக்களுடைய விருப்புக்கு மாறானது.

அந்த அடிப்படையில் மக்களின் விருப்பத்திற்கு யாரை அகற்ற வேண்டுமென மக்கள் ஒன்றிணைந்து வாக்களித்தார்களோ அவரே பதவியில் மீள அமர வேண்டுமென்பதற்காக  இவர்கள் இருவரும் எங்களை விமர்சித்து கருத்துகளைக்  கூறிக் கொண்டிருக்கின்றார்கள்  என்றார.