ஆப்கானில் தலிபான்களின் தாக்குதலில் 30 பொலிஸார் பலி

ஆப்கானிஸ்தான் மேற்கு பகுதியில் உள்ள பரா மாகாணத்தில் சோதனைச் சாவடி மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 30 பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் சுமார் 45 சதவீதமான பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான்கள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.

 

இந்நிலையில், அந்நாட்டின் மேற்கு பகுதியில் தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த பரா மாகாணத்திற்குட்பட்ட காக்கி சபெட் மாவட்டத்தில் உள்ள ஒரு சோதனைச் சாவடி மீது நேற்று தலிபான் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் அம்மாவட்ட பொலிஸ் அதிகாரி உட்பட 30 பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 4 மணிநேரம் நீடித்த இந்த சண்டைக்கு பின்னர் அங்கிருந்து ஏராளமான ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் கிளர்ச்சியாளர்கள் அள்ளிச் சென்றதாகவும் எதிர் தாக்குதலில் 17 தலிபான்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.