சிங்கள அரசுடன் இணைந்து அடிமைகளாக நாம் வாழ்ந்தது போதும் மக்களே முடிவெடுங்கள்!

தாயகம், தேசியம், தன்னாட்சி, உரிமை எனும் எமது மக்களின் தமிழீழ கொள்கையை முன்நிறுத்தி த.தே.கூட்டமைப்பு தேர்தலை சந்திக்குமா

எமது மக்களின் அடிப்படை உரிமைகளான தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை என்ற உண்மையான எதிர்பார்ப்புக்களை தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் எழுதிவைத்துவிட்டு அதை ஒவ்வொரு முறையும் நடைபெற்றுவரும் பாராளுமன்ற தேர்தல் காலத்தில் தமது வாய்கள் கிழிய மேடையேறி முழங்கிவிட்டு இலங்கை சிங்கள அரசின் ஒற்றை ஆட்சிக்குள் அடிபணிந்து அரசியல் செய்துவரும் மிகவும் கீழ்மையான அரசியல் போக்கையே தமிழர்களின் பிதிநிதிகளான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அன்றுதொட்டு இன்றுவரை தமது இராஜ தந்திரமாக செயற்படுத்தி வருகின்றது.

போர் முடிவிற்கு பின்னரான சுமார் ஒன்பது வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும்,இதுரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனது மக்களின் கொள்கையாக தான் வரைந்து வைத்திருக்கின்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் முதன்மையாக குறிப்பிடப்பட்டுள்ள “தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை” என்ற மிகவும் பிரதானமான அடிப்படை கொள்கைகளை அடியோடு தாம் கைவிட்டுவிட்டு தமது மக்களுக்கான தேர்தல்கால வாக்குறுதிகளை மறந்தே நேற்றுவரை அது செயற்பட்டுவந்தது.

அத்துடன் சிங்கள அரசின் நயவஞ்சக அரசியல் சூழ்ச்சிகளுக்கு தம்மை இசைவாக்கி அவர்களின் அரசியல் வெற்றிகளுக்கான முன்னேற்றங்களுக்கு தாம் தெரிந்துகொண்டே தம்மையே பலியாக்கி தமிழர்களின் ஒன்றுதிரட்டப்பட்ட அரசியல் பலத்திற்கு தாமே குழிதோண்டும் அதிசிறந்த முட்டாள்களாகவே தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்து செயற்பட்டுவருகின்றது.

மேலும் இலங்கை அரசிற்கு எதிரான சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளைக்கூட நல்லாட்சி என்ற போர்வையில் அதை சிங்கள அரசுடன் இணைந்து தமிழர் தரப்பாக நின்று உள்ளக விசாரணையாக அதை மாற்றி இரு இனங்களுக்குமான பிரச்சினைகளை நாமே எமக்குள் பேசி தீர்த்துக்கொள்வோம் என்று உலக நாடுகளை தமிழர் தரப்பாக நின்று வலியுறுத்தி மாபெரும் முட்டாள்த்தனத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தான் செய்துவிட்டதன் விளைவே மகிந்த இராஜபக்சவின் தற்போதைய மீள் எழுச்சியாகும்.

இதைவிட பெரிய கொடுமை என்னவெனில், தமிழர்களின் ஒன்றுதிரட்டப்பட்ட அரசியல் பலத்தினை சிதைக்கும் காரியங்களை இலங்கை சிங்கள அரசு மிகவும் திட்டமிட்டு தான் செயற்படுத்திவருவதற்கு ஆதரவான போக்கினையே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்றுவரை தொடர்ந்துவந்தது.

உதாரணமாக எமது தமிழ்த் தேசியத்தின் உரிமைமிக்க தேசிய சொத்துக்களான எமது போராளிகளை தமக்கு வேண்டாதவர்களாக்கியமை, அந்த போராளிகள் தம்மை கொல்வதற்கு அலைவதுபோல் இலங்கை அரசால் கூறப்பட்டதை முழுமையாக ஏற்றுக்கொண்டு இலங்கை அரசின் திட்டமிட்ட பாதுகாப்பை தாம் பெற்றுக்கொண்டமை, போரில் அகப்பட்டு சிறகைளில் இருந்து வெளிவந்த போராளிகளை அதே இலங்கை அரசின் உளவாளிகள் என்றமை,

போரில் சாகாமல் உயிர் தப்பிய போராளிகள் அனைவரையும் துரோகிகள் என்றமை மற்றும் ஏன் நீங்கள் சாகவில்லை என்று அவர்களை வஞ்சித்தமை போன்ற இன்னும்பல விமர்சனங்களை எமது போராளிகளுக்கெதிராக பரப்பி எமது மக்களுக்குள் இருந்த தேசிய ஒற்றுமையையும் போராளிகள் மீதான நன்மதிப்பையும் சிதைத்து போர்க்காலத்தில் எமது மக்களுக்கு பாரிய தீங்குகளை விளைவித்த தேசவிரோத அரசியல் கட்சிகளை போராளிகளுக்கு நிகரானவர்களாக்கி அந்த கட்சிகளை தாம் ஆதரிப்பதான போக்குகளை கடைப்பிடித்ததால்,

ஏற்கனவே நடந்துமுடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் கணிசமான வாக்குகள் சிதறடிக்கப்பட்டு மேற்குறிப்பிட்ட கட்சிகளுக்கு போனமையினால் தற்போதைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒன்றுதிரட்டப்பட்ட மக்கள்பலம் சிதறியதற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எல்லைகடந்த பச்சை துரோகங்களே பிரதான காரணங்களாகும்.

அத்துடன் இலங்கை அரசின் திட்டமிட்ட அரசியல் பொறிகளுக்குள் தம்மைப்போன்று விழுந்து பயணிக்கமுடியாத வடக்கின் முன்னாள் முதல்வர் உள்ளிட்ட இன நலன் விரும்பிகளை தமிழ்த் தேசியத்திற்கு விரோதமானவர்களாக தாம் சித்தரித்து அவர்களின் ஆளுமைமிக்க பொதுநலம்கொண்ட மனேபபலத்தை பலவீனப்படுத்தி தம்மைப்போன்ற கோழைகளையே தமிழர்களின் அரியல் தலைவர்களாக்கி இலங்கை அரசு கொடுக்கும் சலுகைகளுக்கும்,திட்டங்களுக்கும் அடிபணிந்து போகக்கூடிய அடிமட்டமான சூடு சொறணையற்ற தமிழர் தலைவர்களையே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தற்போதுவரை தன்னோடு இணைப்பதிலும் தீவிரம்காட்டிவருகின்றது.

இவைகள் மட்டுமன்றி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியத்திற்கு விரோதமான அரசியல் போக்குகளை இனங்கண்டு இணையங்களில் தமது கருத்துக்களால் கண்டிக்கமுனையும் எமது போராளிகளையும், மக்களையும் தாம் துரோகிகளாக்கிவிட்டு,தேசிய உரிமைப்போரில் சிறிதளவும் பங்கெடுத்திராத தமது குடும்ப உறவுகளை பயன்படுத்தி தாம் சரியான பாதையில் பயணிப்பதான செய்திகளை பரப்பிவருவதையும் நாம் அவதானிக்கமுடிகின்றது.

மேற்சொன்ன பலதரப்பட்ட விடையங்களின் அடிப்படையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது தமிழீழ விடுதலைப் புலிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட அவர்களின் தமிழ்த் தேசிய மக்கள் சக்தியை இலங்கை அரசுடன் இணைந்து தாம் சிதைகும் நடவடிக்கைகளையே கடந்த ஒன்பது வருடங்களாக செய்துவந்துள்ளதென்பது இங்கே எமக்கு மிகவும் தெளிவாக புலப்படுகின்றது.

அத்துடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இப்படியான பகிரங்க துரோகங்களால் உளவியல் ரீதியாக சிதைக்கப்பட்டவர்களே இன்று தத்தமது தலைமையில் எமது தமிழ்த்தேசியத்தை அணிதிரளுமாறு கூறி தமது பிழைப்புவாத அரசியலை மையமாக வைத்து எமது மக்களை தேசியம்பேசி கூறுபோட முனைவதுடன் சிலர் தம்மை தமிழர்களின் தேசிய தலைவராக கற்பனை செய்வதையும் நாம் அவதானிக்கமுடிகின்றது.

இதேவேளை தமிழர்களின் உண்மையான அரசியல் சுதந்திரத்திற்காக இறுதிவரை போராடிய எமது முன்னாள் போராளிகள் சிலரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நயவஞ்சக அரசியல் துரோகங்களால் பாதிக்கப்பட்டு தாமும் ஒருசில அரசியல் கட்சிகளை ஆரம்பித்து தமது மக்களை எப்படியாவது தமது தேசியத்தின்பால் ஒருங்கிணைக்கவேண்டும் என்று முயன்றுவருவதையும் நாம் அவதானிக்கமுடிகின்றது.

ஆனாலும் அவர்களை எமது மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாக எழும்பவிடாது தடுத்துவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர்,எமது போராளிகளை விமர்சித்து அவர்களை இலங்கை புலனாய்வாளர்கள் என்று தாம் கூறிவருவதுடன் அவர்களை இலங்கை அரசுடன் இணைந்து திரைமறைவில் முடக்குவதிலும் மிகவும் தீவிரமாக செயற்பட்டுவருகின்றது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இப்படியான பச்சை துரோகங்களுக்கு தாயகத்திலுள்ள எமது மக்களும் புலம்பெயர் தேசங்களிலுள்ள எமது மக்களும் தாம் முடிவுகட்டுவதற்கான ஓர் இறுதி சந்தர்ப்பமாக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை தமக்கான ஒரேயொரு பிடிமானமாக கையிலெடுத்து இதுவரை காலமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் தேர்தல் காலங்களில் முன்வைக்கப்பட்டு இதுவரை அவர்களால் நடைமுறைப்படுத்தப்படாத “தாயகம்,தேசியம் தன்னாட்சி உரிமை” எனும் தமிழீழ தனியரசை உடனடியாக தாயகத்தில் நிறுவுவதற்கான உறுதிமொழிகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறுதியாக குறிப்பிட்டு அதன் அடிப்படையில் மக்களின் வாக்குகளை பெற்று உலக நாடுகளிடம் எமது மக்களின் ஏகோபித்த விருப்பத்தை உடனடியபக தாம் தெரியப்படுத்தவேண்டும்.

இவைகள் ஏதும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் உருப்படாத பட்சத்தில் இதே கோரிக்கைகளை தற்போது உருவாகியிருக்கும் முன்னாள் முதல்வர் திரு.விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியிடம் சமர்ப்பித்து மேற்குறிப்பிட்ட அடிப்படையில் அவர் தேர்தலில் களமிறங்குவாரானால் எமது ஒட்டுமொத்த தமிழ்த் தேசியமே திரண்டு முதல்வரை ஆதரித்து அவர் ஊடாக மேற்சொன்ன விடையங்களை நடைமுறைப்படுத்துவதே சிறந்த முடிவாகும்.

இவற்றை நடைமுறைப்படுத்த முன்வராத எவரையும் இனிவரும் காலங்களில் அவர்களை எமது தமிழ்த்தேசியவாதிகள் என்றோ,தமிழ்த் தேசியத்தை மீட்பார்களென்றோ நாம் எதிர்பார்க்காது நாம் எமது இனத்துக்காக போராடி அழிந்தவர்கள் என்ற பெருமையோடு எம் எதிரிகள் போடும் எச்சங்களை எமக்கான பிச்சைகளாக ஏந்தி நாம் சாகும்வரை எம் எதிரிகளாலும் எம் இனத்தவராலும் தோற்றவர்களாக வாழ்ந்துவிட்டு மடிவதைத்தவிர எமக்கு வேறு வழியில்லை.